மும்பை: மராட்டிய மாநில பாரதீய ஜனதா அரசின் அமைச்சரும், அம்மாநிலத்தின் மறைந்த பாரதீய ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளுமான பங்கஜா முண்டே, இத்தேர்தலில் பார்லி தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
கடந்த 2014ம் ஆண்டு, மோடி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே, டெல்லியில் நடந்த ஒரு மர்மமான விபத்தில் பலியானார். அவரின் மரணம் பல கேள்விகளை எழுப்பியது.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. வெற்றிபெற்றால் முதல்வர் பதவி ரேஸில், ஓபிசி வகுப்பைச் சேர்ந்த அவர்தான் முந்துவார் என்ற நிலையில், அவர் மர்மமான விபத்தில் இறந்தது சந்தேகத்தைக் கிளப்பியது.
இந்நிலையில் கடந்த தேர்தலில் அவரின் மகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர் வெற்றிபெற்று அமைச்சராக்கப்பட்டார். ஆனால், இந்தமுறை அதே பார்லி தொகுதியில் அவர், தனது உறவினரும், தேசியவாத காங்., சார்பில் போட்டியிட்டவருமான தனஞ்செய் முண்டேவிடம் தோற்றுப்போனார்.
இத்தோல்வி குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், சோகம் தாங்கமாட்டாமல் கதறி அழுதார். “மாநில அமைச்சராக இருந்தபோது நான் இந்தத் தொகுதிக்காக உழைத்தேன். தோல்வியை தாங்க முடியவில்லை. இதற்கு நானே முழுக் காரணம். மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்.