ராதாபுரம்: ஊராட்சியின் நிதியை முறைகேடாக கையாடல் செய்தாக சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேர்தல் நடைபெற்று, ஊராட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள் விரைவில் பதவிக்கு வந்துவிட இருப்பதால், அங்கு பணியாற்றி வரும் ஊராட்சி செயலர்கள், ஊராட்சிக்கான நிதியை கையாடல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி, சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிதியை கையாடல் செய்த ஊராட்சிச் செயலர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள ஒப்பந்ததாரர்களி வங்கிக்கணக்கில் ஊராட்சியில் இருந்து ரூ.17 லட்சம் திடீரென டெபாசிட் செய்துள்ளார். ஒப்பந்த பணி ஏதும் இல்லாத நிலையில், திடீரென வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி செயலரைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அப்போது, அவர், ‘நான்தான் பணத்தைப் போட்டேன் அந்தப் பணத்தை எனக்கு வங்கியில் எடுத்துக் கொடுங்கள் உங்களுக்கு ஒரு கமிசன் தருகிறேன்’ எனப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன்பேரில் தற்போது ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஜோசப் பாரதிய தாஸ், ஊராட்சிச் செயலர் பாலசுப்ரமணியனைப் பணியிடை நீக்கம் செய்ததுடன், ஒப்பந்ததாரர்களின் வங்கிக்கணக்கையும் முடங்கினர்.
ர். இந்தச் சம்பவம் திருநெல்வேலி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.