சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, முதன்முறையாக தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், பனை பொருட்கள் விற்பனை, மனை வெட்ட தடை உள்பட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்வெளியிட்டிருந்தார். பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும், பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தற்போது பனைபொருட்கள் விற்பனைக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில், அமுதம் அங்காடிகளில் பனைவெல்லம் விற்க தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு அட்டைக்கு 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் பனைவெல்லம் வாங்க கோரி குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.