சென்னை

பிரதமர் மோடியின் வருகையையொட்டி 200 வருடப் பாரம்பரிய பல்லாவரம் வாரச்சந்தை நேற்று மூடப்பட்டது.

சென்னை புறநகரான பல்லாவரத்தில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சந்தை சுமார் 200 ஆண்டுகள் பழைமையானதாகும்.   இந்த சந்தையில்  கிடைக்காத பொருள்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

 

சந்தையில் காய்கறிகள், பழங்கள், மின்னணு மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள், பூச்செடிகள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர வாகனங்கள், தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இங்குக் குறைந்த விலையில் கிடைக்கும்.  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காகவே சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவது வழக்கமாகும்

தற்போது மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று முன்தினம் ஆரம்பமான செஸ் விளையாட்டுப் போட்டிகளை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு, தமிழக முதல்வருடன் சேர்ந்து விழாவைத் தொடங்கி வைத்தார்.

ஆகவே பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை விமான நிலையம் அருகே மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடும் இடமானதுமான பல்லாவரம் சந்தையைத் திறப்பதற்கு காவல்துறை தடை விதித்தனர்.   இதையொட்டி பல்லாவரம் கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில் வழக்கமாகச் சந்தை நடைபெறும் இடத்தில், சந்தை இன்று விடுமுறை என்று விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டது.

இங்கு தடுப்புகளை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தை நடைபெறும் பகுதியில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.  இந்த விவரம் தெரியாமல் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தையில் பொருட்கள் வாங்கலாம் என்று திரண்டு வந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்ய வந்த சிறு வியாபாரிகள் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.