பழனி: முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும், பழனி  தைப்பூசம் விழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவினையொட்டி,  ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

இந்த நிலையில், நடப்பாண்டு, பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல் யாணம் பிப்ரவரி 3ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து,  தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது.

தைப்பூச விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை மற்றும் பல்வேறு காவடிகளை எடுத்து வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகிறது.  பழனி மலைக்கோயில் அடிவாரம், இடும்பன்கோயில், சன்னதி வீதி, சண்முக நதி, பெரியநாயகிம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் குடிநீர் கழிவிடம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. தலைமையில் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திட்டமிட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.