முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும்.

இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. மலைகளில் மருந்து கிடைப்பது இயற்கை. ஆனால் ஒரு மலையே மருந்தாய் அமைந்தது அபூர்வம்! அந்த அபூர்வ மலையே திருஆவினன்குடி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுகிறது.

பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுது. இத்தலம் “பழனி” என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்ததால், “பழம் நீ” என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது.

திருவாவினன்குடி கோவிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோவிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் “சச்சிதானந்தம்” என்ற பெயரில் வருகின்ற “சத்” என்னும் பதம் சிவபெருமானையும், “சித்” என்னும் பதம் பார்வதி தேவியையும், “ஆனந்தம்” என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.

முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து “பழம் நீ” என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி “பழனி” என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது. பழனி மலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தப்படியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார். இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான். முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன்.

அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன். ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான். பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.