மதுரை: பொங்கல் பண்டியையொட்டி, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. அதை அடக்க 651 காளையர்களும் களத்தில் இறங்குகின்றனர். இந்த போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசு பெறும் காளையருக்கு கார் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் களைக்கட்டியுள்ளது. நேற்று முதல்போட்டியாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முதன்முறையாக நேரில் வந்து பார்த்துச் சென்றார்.
இதையடுத்து, இன்று 2வது போட்டியாக மதுரை பாலமேட்டில் போட்டியானது தொடங்கி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு போட்டியை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்கேற்க உள்ளன. மேலும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். போட்டியில் தேர்வாகும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.