இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டுள்ளார்.

imran

கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்த்யா உட்பட உலக நாடுகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பாகிஸ்தான் மீது பொருளாதார நெருக்கையை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தியா போர் தொடுத்தால் தாக்குதலுக்கு தாயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ராணுவ தளபதி, உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், ராணுவம், வெளியுறவு மற்றும் நிதித்துறையை சார்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு, போர் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் நிறைவடைந்த நிலையில் அந்நாட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ பாகிஸ்தான் மக்களை பாதுகாப்பும் வலிமை அரசுக்கு உள்ளது. புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது. பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இந்தியாவிடம் இருந்து பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் யாராவது பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதாக ஆதாரங்கள் கிடைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது விபரீதங்களை ஏற்படுத்தும் நோக்கத்திலோ இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளது “ என கூறப்பட்டுள்ளது.