பிரதமர் மோடியின் கடிதத்துடன் மோடி அரசின் சாதனைகள் குறித்த வாட்ஸ்அப் தகவல் இந்தியர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட இந்த தகவல் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தவிர, எமிரேட்ஸ் நாட்டு மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் நேற்று வாட்ஸ்அப்-பில் பகிரப்பட்டுள்ளது.

இந்திய எண்ணில் இருந்து வந்த வாட்ஸ்அப் தகவல் குறித்து ஆச்சரியமடைந்த அவர்கள் இந்திய அரசுக்கு தங்கள் மொபைல் எண் எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

துபாயை தளமாகக் கொண்ட பாகிஸ்தானிய பத்திரிகையாளர் அஸ்மா ஜைன் தனக்கு இந்த செய்தியின் தொடர்பு குறித்து திகைப்புடன் தெரிவித்தார். “எனக்கு நள்ளிரவில் செய்தி வந்தது. அது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது: திரு. மோடிக்கு என்னிடம் இருந்து என்ன வகையான ஆலோசனைகள் தேவைப்படலாம்? மேலும் முக்கியமாக, நான் அவற்றை வழங்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2047ம் ஆண்டில் வளமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வரும் பிரதமர் மோடியின் கடிதம் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாட்ஸப் மூலம் பகிரப்பட்டது அங்குள்ள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.