ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஹனீஃப், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 20-ம் தேதி சிறைக்குள் இருந்த தீவிரவாதி முகமது ஹனீஃப் உட்பட 9 பேர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து வந்த சத்தத்தை கேட்டு சிறை வார்டன் ஓடி வந்தார். ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். இதில், முகமது ஹனீஃப் நினைவிழந்து கிடந்தார். அவரை சோதித்தபோது இறந்துவிட்டது தெரிந்தது.
இதனையடுத்து அஜித், மனோஜ் பிரதாப் சிங், குல்விந்தர் குர்ஜார் மற்றும் பஜன் மீனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில். முகமது ஹனீஃபின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ” முகமது ஹனீஃப் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
அவரது மூளைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுவே அவர் இறப்பதற்கு காரணமாகி விட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
அவரது உடல் வாகா அல்லது அடாரி எல்லை வழியே பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும். இது குறித்து, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேதி மற்றும் இடத்தை உள்துறை அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் தூதரகம் முடிவு செய்வர்” என்றனர்.
முகமது ஹனீஃப் பாகிஸ்தான் சியால் கோட் பகுதியை சேர்ந்தவர். இவர் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்.தீவிரவாதச் செயலில் ஈடுபட முயன்ற போது, கடந்த 2017 -ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சேர்த்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மேலும் 7 பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.
இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்கர் அலி மற்றும் முகம்மது ஹனீஃப் ஆகியோர் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]