லண்டன்:

லண்டன் தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தானில் பிறந்த பயங்கரவாதி ஏற்கனவே பயங்கரவாதம் தொடர்பான ஆவணப்படத்தில் தோன்றியவன் என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 3ம் தேதி லண்டன் பிரிட்ஜ் மற்றும் பாரோ மார்க்கெட் பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் இறந்தனர். 48 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் பெயரை அந்நாட்டு போலீஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஒருவன் பாகிஸ்தானில் பிறந்து லண்டனுக்கு குடிபெயர்ந்தவன். 27 வயதாகும் அவனது பெயர் குராம் ஷாசத் பட்.

மற்றொருவன் மொராக்கன் மற்றும் லிபியன் என அழைக்கப்படும் ராஷித் ரெட்டானே ஆகும். 3வது நபர் யார் என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் பிறந்த பயங்கரவாதி குராம் ஷாசத்த்தின் பயங்கரவாத தொடர்பு குறித்து ஏற்கனவே எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.

லண்டனில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் குராம் ஷாசத் பணிபுரிந்துள்ளான். பிரிட்டன் உளவுத் துறைக்கு ஏற்கனவே அவனை பற்றி தெரிந்துள்ளது. பிரிட்டனில் பயங்கரவாத ஆதரவு கருத்து தொடர்பாக சேனல்- 4 எடுத்த‘‘ தி ஜிகாதிஸ் நெஸ்ட் டோர்’’ என்ற ஆவணப்படத்தில் தோன்றியவன் இவன் என தெரியவந்துள்ளது.

ஆவணப்படத்தில் தோன்றிய அவன் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை பரப்பியுள்ளான். பலரை பயங்கரவாத இயக்கத்தில் இணைய செய்யவும் முயற்சி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆவணப்படத்தில் ஐ.எஸ். கொடியுடன் இவனை போன்றவர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இதுபோக குராம் ஷாசத் பிரிட்டனில் ஜிம்முக்கு சென்றபோது சிறுவர்களை பயங்கரவாத பாதைக்கு இழுக்க முயற்சி செய்துள்ளான்.

இது தொடர்பாக ஒரு சிறுவனின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவனுடைய நடவடிக்கையை தொடர்ந்து காவல் துறை கண்காணிக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

லண்டனில் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து புறநகர் பகுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்றது. அவர்களில் 10 பேர் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.