லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகின்றன தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள். இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ஏற்கனவே பாகிஸ்தான் கைப்பற்றிவிட்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 104 ரன்களை விளாசினார்.
மற்ற பேட்ஸ்மென்கள் யாரும் சோபிக்காத காரணத்தால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது பாகிஸ்தான்.
பின்னர், சுமாரான சவால் கொண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், துவக்க வீரர்கள் மாலன் 44 ரன்களும், ரீஸா ஹென்ரிக்ஸ் 54 ரன்களும் அடித்தனர்.
ஆனால், நடுவரிசை பேட்ஸ்மென்கள் பந்துகளை வீணடித்ததால், கடைசியில் ஆடியவர்கள் அதிரடியாக ஆடினாலும், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது தென்னாப்பிரிக்கா.
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், தற்போதைய நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான்.