பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கடத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 500 பேரின் நிலை குறித்து அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் எழுந்துள்ளது.

குவெட்டாவிலிருந்து பெஷாவர் செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸை தீவிரவாதிகள் ரயில்வே சுரங்கப்பாதையின் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் 214 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்றதாகவும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) தெரிவித்துள்ளது.

தவிர, அனைத்து பயணிகளையும் விடுவிப்பதற்கு ஈடாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க 48 மணி நேர காலக்கெடுவை அந்த அமைப்பு வழங்கியுள்ளது இல்லையென்றால் அனைவரையும் கொல்லப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், 500 பயணிகளில் 155 பேரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுள்ளதாகவும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும் ரயிலில் உள்ள மற்ற பயணிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.