பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள், அந்த அணி மீண்டும் எழுச்சிப் பெற்றுவிட்டதா? என்று கிரிக்கெட் விமர்சகர்களை யோசிக்க வைத்துள்ளது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை வென்றது தவிர, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடன் தோற்றதையடுத்து, அந்த அணி புள்ளிப் பட்டியலில் கீழே சென்றது. இதனையடுத்து அந்த அணியின் மீது சொந்த நாட்டில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில்தான் அந்த அணி மீண்டும் சுதாரித்து எழுந்தது. தென்னாப்பிரிக்காவுடன் நடந்தப் போட்டியில் 49 ரன்களில் வென்றதுடன், வலுவான அணி என்று கருதப்பட்ட நியூசிலாந்தையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திவிட்டது.
தற்போது புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எஞ்சியிருக்கும் அடுத்த 2 போட்டிகளில் அந்த அணி ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி வெல்லும்பட்சத்தில் மொத்தமாக 11 புள்ளிகளைப் பெறும் அந்த அணி அரையிறுதியில் நுழையும் சாத்தியங்கள் மிக அதிகம்.

அதேசமயம், கடைசி 2 போட்டிகளை அதிக ரன் ரேட் அடிப்படையில் வெல்வதும் முக்கியம். அப்போதுதான், 11 புள்ளிகளுடன் இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன் போட்டியிட வேண்டிய நிலை வந்தால், பாகிஸ்தான் தப்பிப் பிழைக்கும்.