லண்டன்: பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன்னை பொது இடத்தில் வைத்து ‘கொழுத்தப் பன்றி’ என்று தன் மகன் அருகில் இருக்கையில் திட்டியதால், தன் மனம் மிகவும் வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார் அந்நாட்டு அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது.

இந்தியாவிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றுப்போனதை அடுத்து, அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, பாகிஸ்தான் கேப்டனின் உடலமைப்பைக் குறிவைத்து பல கிண்டல்களும், கேலிகளும் எழுந்தன.

ஒரு ஷாப்பிங் மாலில், தன் மகனுடன் சர்ஃப்ராஸ் அகமது நடந்துகொண்டிருக்கையில், அவரைக் கடந்து செல்லும் ஒரு பாகிஸ்தான் ரசிகர், சர்ஃப்ராஸ் அகமதைப் பார்த்து ‘கொழுத்தப் பன்றி’ என்று திட்டுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

அதேசமயம், அந்த ரசிகரின் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர், சர்ஃப்ராஸ் அகமதுவிடம் மன்னிப்புக் கோரியதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன். ஆனால், அந்த வீடியோவைப் பார்த்து அவரின் மனைவி அழுததைக் கண்டபோது, அவரின் மனம் இன்னும் அதிகமாக புண்பட்டதாக தெரிவித்துள்ளார் சர்ஃப்ராஸ் அகமது.

“சரியாக செயலாற்றாதபோது, இத்தகைய விமர்சனங்கள் கட்டாயம் எழத்தான் செய்யும். இதையெல்லாம் நாம் தாங்கிதான் ஆக வேண்டும்” என தன் மனைவிக்கு ஆறுதல் கூறியதாய் தெரிவித்துள்ளார் சர்ஃப்ராஸ் அகமது.