இஸ்லாமாபாத்: ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி 201 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம், பாகிஸ்தானைவிட 71 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில், அந்த அணியின் டெம்பா பவுமா அடித்த 44 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 பேர் ரன்அவுட் முறையில் அவுட்டானார்கள்.

தற்போது, 71 ரன்கள் முன்னிலையுடன், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ள பாகிஸ்தான் அணி, 1 ரன் எடுத்த நிலையிலேயே 1 விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 7 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 1 ரன் மட்டுமே எடுத்துள்ளது.

தற்போது, 3வது நாள் ஆட்டமே நடந்துவரும் நிலையில், அதிரடியாக ஆடி, பெரியளவு ரன் இலக்கை, தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்குமா பாகிஸ்தான்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.