இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.

இந்த நிலையில், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இந்த சூழலில், பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது கடந்த மாதம் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. முன்னதாக, இம்ரான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முத்தாஹிதா குவாமி முவ்மென்ட்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி) கட்சியின் 2 அமைச்சர்கள் பதவி விலகினர். அவர்கள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.