சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்த பாகிஸ்தான் செஸ் விளையாட்டு வீரர்கள், அந்நாட்டு அரசின் துக்ளக் தனமான அறிவிப்பால், சோகத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இது மற்ற நாட்டு வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருந்தாலும் விளையாட்டு உள்பட பல நிகழ்வுகளில் சமாதானமாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதுபோல, இந்தியாவில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பாகிஸ்தான் பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியில் 189 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், 44வது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை புனேவிலிருந்து – சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அதன்படி,19 பாகிஸ்தான் நாட்டு செஸ் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். தொடக்க விழாவிலும் பங்கேற்பதாக இருந்தது. அவர்களை ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் அவர்களை வரவேற்றனர். பின்னர் அனைவரும் சொகுசு வாகனங்கள் மூலம் சென்னை ஓஎம்ஆர் சாலை, சிறுசேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மாலை திடீரென செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு கடைசி நேரத்தில் அறிவித்தது. இந்த தகவல்கள் தெரிந்த பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தொடக்க விழாவிற்கு வந்திருந்த பாகிஸ்தான் அணியினர் கொடி அணி வகுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், நேற்றிரவு அவர்கள் 19 பேரும் சிறுசேரி நட்சத்திர விடுதியிலிருந்து சோகத்துடன் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் புனே செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், புனேவுக்குத் திரும்பிச் சென்றனர். தமிழக அரசு அதிகாரிகள் அவர்கள் நாடு திரும்ப தேவையான உதவிகளை செய்து, 19 பேரையும் விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மற்ற நாட்டு வீரர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது.