டெஸ்ட் கிரிக்கெட்டில் ரணகளமாக ஆடி ரன்களைக் குவிக்கும் பாகிஸ்தான் வீரர் யூனுஸ்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதுடன், தாம் விடைபெற விரும்புவதாக கராச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் யூனுஸ்கான் தெரிவித்தார்.

ஒரு விளையாட்டு வீரன் எப்போதுமே உடல் தகுதியோடு இருக்க முடியாது என்று கூறிய யூனுஸ்கான், தாம் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் எனக் கருதுவதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், இந்த முடிவைத் தாம் திடீரென எடுக்கவில்லை என்றும், உரிய தருணத்திற்காக காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

39 வயதான யூனுஸ்கான், 115 டெஸ்ட்டுகளில் விளையாடி இதுவரை 9,977 ரன்களை எடுத்துள்ளார். இதுவரை 34 முறை சதமடித்துள்ள யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்களை நிறைவு செய்வதற்கு 23 ரன்களையே எடுக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் தேர்வுக்குழு யூனுஸ்கானை அதுவரை விளையாட அனுமதிக்குமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. தற்போது, அந்த இலக்கை எட்டும் வாய்ப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பின்னர் ஓய்வு பெறப் போவதாக யூனுஸ்கான் அறிவித்துள்ளார்.