இஸ்லமாபாத்:

பாகிஸ்தானில் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும் முன்னாள் ராணுவத்தினரை இனி பாகிஸ்தான் ராணுவம் தான் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் சமூக வலைதளங்கள் வழியே வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் நிபுணர்கள் என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சிலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இவர்களது கருத்து அரசியல் நிலைமைக்கு மாறுபட்டதாக உள்ளது. எனவே, பாகிஸ்தான் ராணுவம் ஒப்புதல் அளிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மட்டுமே விவாதங்களில் பங்கேற்பார்கள்.

இந்த சுற்றறிக்கையை அனைத்து தொலைக்காட்சிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பு ஆய்வாளர்கள் என்ற முத்திரை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு தரப்படுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான விவகாரங்களில் அவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றதால், இப்போதைய பாதுகாப்பு வளர்ச்சி பற்றி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பெரும்பாலான விவாதங்கள் பாதுகாப்பு விசயத்திலிருந்து தொடங்கி அரசியலில் முடிகின்றன. இது சரியல்ல.

இனி பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவின் மக்கள் தொடர்பு துறையிடம் அனுமதி பெற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசியலில் அந்நாட்டு ராணுவத்துக்கு நீண்ட தொடர்பு உண்டு. கடந்த 1958-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் 3 ராணுவ புரட்சியை சந்தித்துள்ளது. பல ஆண்டுகள் நேரடி ராணுவ ஆட்சியும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.