இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், இந்திய அணி வெல்ல வேண்டுமென்று ஆதரவு தெரிவித்து, தங்களின் கடவுளையும் வேண்டிக்கொண்டு வருகிறார்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள்.

உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே நுழைந்துவிட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியின் வாய்ப்புகளும் சிறப்பாகவே உள்ளன.

எனவே, தற்போது நான்காவதாக யார் அரையிறுதியில் நுழைவார்கள் என்பதற்குத்தான் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில், இன்றைய இந்தியா – இங்கிலாந்து போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கப்போகிறது.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் பலர், இப்போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்று ஆதரவும் வேண்டுதலும் வழங்கி வருவதுதான்.

ஏனெனில், இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதியில் நுழைந்துவிட்ட நிலையில், 8 புள்ளிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து இப்போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு, அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு பிரகாசமாகும். அந்த வாய்ப்பு என்பது, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியில் உறுதிசெய்யப்படும்.

அதேசமயம், இங்கிலாந்து அணி வென்றுவிட்டால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு பெரிய சிக்கலாகிவிடும். எனவேதான், பிடிக்காது என்றாலும்கூட, இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் பலர், இந்திய அணிக்கு தங்களின் ஆதரவையும் வேண்டுதல்களையும் அளித்து வருகிறார்கள்.