இஸ்லாமாபாத்: 
பாகிஸ்தானின் கராச்சியில்  உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இது தொடர்பாகச் சிறுபான்மையினருக்கான ஒரு நபர் ஆணையத்தின் கூட்டுறவு உறுப்பினர் ரமேஷ் குமார் தொடர்ந்த வழக்கில்,   கராச்சியின் சதார் நகரில் சுமார் 716 சதுர அடி அளவைக் கொண்ட இந்த சொத்து,  இந்து தர்மசாலாவுக்கு சொந்தமானது என்றும், இந்த கட்டிடத்தின் புகைப்படங்களையும் உச்சநீதிமன்றத்தில்  சமர்ப்பித்துள்ள அவர்,  இதை இடித்து வணிக வளாகம் கட்ட தனி நபருக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின்  மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பிய நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.