துபாய்
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையே நடந்த ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் வாங்கி உள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடையும் அணி ஒயிட் வாஷ் பெற்ற அணி ஆகும்.. துபாயில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த 5 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்றது.
கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கவாஜா 98 ரன்களும், மேக்ஸ்வெல் 70 ரன்களும், பிஞ்ச் 53 ரன்களும் ஷான் மார்ஷ் 61 ரன்களும் எடுத்திருந்தனர். பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 328 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது .
பாகிஸ்தான் அணியின் அபிட் அலி முதல் பந்தில் டக் அவுட் ஆனார். இதற்கு முந்தைய நான்காம் போட்டியில் இவர் 112 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்த போதிலும் போட்டி முடிவில் அவர்களால் 7 விக்கட் இழப்புக்கு 307 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதை ஒட்டி ஐந்தாவது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடி உள்ளது. இதனால் தொடரில் முழுத் தோல்வி அடைந்து பாகிஸ்தான் ஒயிட்வாஷ் வாங்கி உள்ளது.
உலகக் கோப்பை தொடரை எதிர்பாத்திருக்கும் பாகிஸ்தானுக்கு இந்த தோல்வி மிகவும் பின்னடைவை அளித்துள்ளது.