வேலூர்:

பரோலில் வெளியே வந்த நளினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, அவரது தாயார்  பத்மாவதி கட்டித்தழுவி கண்ணீருடன் வரவேற்றார். இருவரும் கண்ணீர் சிந்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நளினி, மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு 14 பேர் கொண்ட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்த நளினி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார்.   தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நிலையில், அவருக்கு  நிபந்தனை களுடன் 1 மாதம் சென்னை உயர்நிதி மன்றம்  பரோல் வழங்கியது.  அதையடுத்து, நேற்று வேலூர் மகளிர் சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப் புடன் வெளியேறியவர் சத்துவாச்சாரி அருகே வள்ளலார் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழ்ப் பேரவை துணைப்பொதுச் செயலாளர்  சிங்கராயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அங்கு தங்கி உள்ளார்.

அவருடன், அவரது தாயார் பத்மாவதி சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் தங்கி உள்ளனர். ஆகஸ்டு 24ந்தேதி பரோல் முடியும் வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வீட்டுக்கு வந்த நளினிக்கு பாரம்பரிய முறைப்படி  ஆரத்தி எடுத்து வரவேற்றும், அவரை கட்டித்தழுவி அவரது தாயார் பத்மாவதி (ஓய்வுபெற்ற நர்ஸ்) வரவேற்றார். இருவரும் ஒருசில நிமிடங்கள் கட்டித்தழுவி கண்ணீர் விட்டனர். இதைக்கண்டவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

நளினியை அவரது சகோதரன் குடும்பத்தினர் ஓரிரு நாட்களில் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய சிங்கராயர், நளினியை நன்றாக ஒய்வெடுக்க கூறியிருப்பதாகவும், அவர் தற்போது பரோலில் வெளியே வந்திருப்பது நல்ல செயல், விரைவில் அவர் விடுதலையாவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நளினியை  சந்திக்க அவரது மகள் ஹரித்ரா விரைல் வருவார் என தெரிவித்தவர், அவருக்கு விசா வழங்கப்படுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், நளினி தனது கணவர் முருகனை விரைவில் சிறையில் சந்தித்து பேசுவார் என்றும் சிங்கராயர் தெரிவித்து உள்ளார்.

ஹரித்ரா கடந்த 2005ம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது மருத்துவம் படித்து வருவதாக கூறப்படுகிறது. அதுபோல நளினியும், முருகனும் நீதிமன்ற உத்தரவுபடி,  15 வாரங்களுக்கு ஒரு முறை 30 நிமிடம் சந்தித்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நளினி தங்கியிருக்கும் வீட்டை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுபடி பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் சுழற்றி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று வேலூர் போலீஸ் எஸ்பி பிரவேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

மேலும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவரது பரோல் உடனே ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.