கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரபட்சம் இன்றி ஓகி புயலுக்கான நிவாரணம் அளிக்க வலியுறுத்தி பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர் 30-ம் தேதி ஓகி புயல் மிகக் கடுமையாக தாக்கியது. இதில் பல நூறு மீனவர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களில் பலர் மீட்கப்பட்டாலும், இன்னும் பலர் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர்களது குடும்பத்தினருக்கு முறையான நிவாரணமும் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் தோட்டங்களில் பெரும்பாலான மரங்கள் புயலில் விழுந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பாரபட்சமில்லாமல் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் கோருகிறார்கள்.
இந்த நிலையில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த மனோ தங்கராஜ் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டத்தின் மையப் பகுதியான புலியூர் குறிச்சியில் ஜனவரி 2ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவங்கினார். இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி, ஜாதி, மதம், இனம் கடந்து சமமான நிவாரணம் அளிக்கவேண்டும், சாலைகளை லஞ்சம் ஊழல் இன்றி தரமாக அமைக்க வேண்டும், அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை மக்களுக்கு தாமதமின்றி செய்திடவேண்டும், அரசு பேருந்துக்களை தரமாக பராமரித்து தூய்மையாக இயக்கவேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
உணவு எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்த மனோ தங்கராஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்தார். மாவட்டம் முழுவதும் இருந்து இளைஞர்கள் பலரும் அந்தப் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.
புலியூர்குறிச்சி போராட்டப் பந்தலில் தாசில்தார், டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் வந்து போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் தங்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என மனோ தங்கராஜ் கூறினார். இன்றும் அவரது போராட்டம் தொடர்கிறது.
எட்டாம் தேதி தமிழக சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில் இந்தப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.