டெல்லி: 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிக்கலாம் என்றும்,  விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 15ந்தேதி கடைசி நாள் என்றும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. அதற்க அடுத்தபடியாக பத்ம விருதுகள் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.  அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகளை மத்தியஅரசு  வழங்கி கவுரவித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும், மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், வழங்கப்படுகின்றது.

முன்னதாக மாநில அரசுகள்,யூனியன் அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக விருதுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மிகவும் தவிர்க்க முடியாத வகையில், அதே சமயம் விளம்பரம் ஏதுமின்றி தங்களது துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.