தஞ்சாவூர்
பருவமழை தீவிரமாகி உள்ளதால் தென் மாவட்டங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் முழுகி சேதம் அடைந்துள்ளன.
தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதில் குறிபாக தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் பகுதிகளில் மழை நீர் தேங்கி பயிர்கள் மூழ்கிய நிலையில் கொல்லாங்கரை பகுதியிலும் மழைநீர் வயல்களில் தேங்கியதால் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. கொல்லாங்கரை பகுதியில் மட்டும் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண் அதிகாரிகள் அங்கு பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தளிகைகுளம் பாவன விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் மாங்குடி, குறிச்சி மூலை, சோலைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த பகுதியில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்