சென்னை, தி.நகரிலுள்ள சர். பி.ட்டி.தியாகராயர் அரங்கில், `அறம்’, `விழித்திரு’, `ஜோக்கர்’ ஆகிய படங்களின் படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜூமுருகன் ஆகியோருக்கு, நேற்று மாலை (24.11.2017) விடுதலை கலை இலக்கிய பேரவை மற்றும் மருதம் கலைக்கூடம் இணைந்து பாராட்டு விழா நடத்தியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நிகழ்ச்சிக்க தலைமை வகித்தார்.
“அறம்” பட இயக்குநர் கோபி நயினாரின் “கருப்பர் நகரம்” என்ற கதையை, அவரிடம் உதவியாளராக இருந்த பா.ரஞ்சித் திருடித்தான் “மெட்ராஸ்” திரைப்படத்தின் கதையை உருவாக்கினார் என்ற புகார் பல வருடங்களாக உண்டு. இதற்காக, “கருப்பர் நகரம்” படத் தயாரிப்பாளர் பாலு, நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். தவிர, “அறம்” படம் வெற்றிக்கு வாழ்த்திய பா.ரஞ்சித், இயக்கநர் பெயரை விடுத்து “நடித்த தோழர் நயன்தாரா” என்று குறிப்பிட்டு ட்விட்டியதும் சர்ச்சைக்குள்ளாகியது. சமூகவலைதளங்களில் பலரும், பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்தனர். ஒரு கட்டத்தில், கோபி நயினாரே, “ எனது நலம் விரும்பிகள் பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் கோபி நயினாரும், பா.ரஞ்சித்தும் ஒரே மேடையில் கலந்துகொள்கிறார்கள் என்பது ஒரு வித எதர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கோபி நயினாருக்கு சால்வை அணிவித்தார் பா. ரஞ்சித். பிறகு பேசியவர், “சாதி கூடாது என்று சேரிலயே பிரசாரம் செய்வதை விட்டுட்டு ஊர்த்தெருவில் வீரியமாக பிரசாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மாற்றம் வரும். சமத்துவம் பிறக்கும். ஆள்பவர்கள், தலித் – தலித் அல்லாதவர்கள் என்ற பிரிவினை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்றெல்லாம் வழக்கம்போல முழங்கினார்.
பிறகு, ராஜுமுருகனின் ஜோக்கர், மீரா கதிரவனின் விழித்திரு, கோபி நயினாரின் அறம் ஆகிய படங்களை பாராட்டிப்பேசினார்.
தொடர்ந்து, “அண்ணன் கோபி நயினாரோட `அறம்’ பல முக்கியமான பிரச்னையைத் தொட்டுப் பேசிய படம். இது போன்ற படங்கள் சமூகத்துக்கு மிகவும் அவசியம். பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வராதபோது, நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க, உருவாக்க முன்வந்தது மிகவும் பாராட்ட வேண்டிய விசயம்” என்ற ரஞ்சித், “ஒரு சிறிய விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது. சமூக வலைதளங்களில் கோபி நயினார் அண்ணனிடம் வேலை பார்த்ததாகவும் அவருடைய கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எனது மெட்ராஸ் திரைப்படம் அவரது கதை என்றும் எழுதிகிறார்கள்.
அதில் துளியும் உண்மை கிடையாது. என் கல்லூரி சீனியர் கோபி அண்ணன். அந்த வகையிலதான் அவரை எனக்குத் தெரியும். `மெட்ராஸ்’ படம் திரைக்கு வரும் முன்பு, ` கோபி நயினாரின் கருப்பர் நகரம் படம் மாதிரியே இருக்கிறது” என்று வழக்கு தொடுக்கப்பட்டது. நான் என், மெட்ராஸ் படத்தினுடைய டிவிடி, ஸ்கிரிப்ட் எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். `அந்தப் படம் வேறு, `மெட்ராஸ்’ வேறு” என்ற நீதிமன்றத்திலேயே நிரூபித்தேன். அதன் பிறகுதான் மெட்ராஸ் படம் வெளியானது.
இது குறித்து அப்போதே, கோபி நயினார் அண்ணனிடம் பேசினேன். அந்தப் பிரச்னை அப்போதே முடிந்துவிட்டது. ஆனால், இப்போது சிலர் வேண்டுமென்றே, கதைத் திருட்டு, அது இது என்று ஆதாரமில்லாமல் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள்.
எங்கள் இருவருக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அந்த முயற்சி பலிக்காது” என்று ஆவேசமாக பேசி முடித்தார் ரஞ்சித்.
அவர் பேசுவதையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அறம் பட இயக்குநர் கோபி நயினார்.