ஜெனிவா: தான் வென்ற உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை தனது தாய்க்கு காணிக்கையாக்குவதாக அறிவித்துள்ளார் உலக பேட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து. மேலும், இன்று தனது தாயின் பிறந்தநாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இந்த வெற்றியை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த தருணத்திற்காகவே காத்திருந்ததாகவும் சிந்துவின் தாயார் விஜயா தெரிவித்துள்ளார்.

தனது பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் துணை ஊழியர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிந்து.

புசர்லா வெங்கட சிந்து என்ற பி.வி.சிந்து என்ற பெயர்தான் இன்னும் சில நாட்களுக்கு நாடெங்கிலும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக இருக்கும்.

பி.வி.சிந்துவின் பதக்க வேட்டைகள்

கடந்த 2013ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடந்த 2014ம் ஆண்டு டென்மார்க்கில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடந்த 2017ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த 2018ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த 2019ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவர்தான். கடந்த 2016ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக்கில் இந்த சாதனையை நிகழ்த்தினார். மற்றொரு வீராங்கணையான சாய்னா நேவால் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து பேட்மின்டன் போட்டியில் எப்படியேனும் சாம்பியன்ஷிப் வென்றுவிட வேண்டுமென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் சிந்து. ஏற்கனவே இரண்டுமுறை கைநழுவிப்போன தங்கத்தை இந்தமுறை கைப்பற்றிவிட்டார்.

ஜப்பானின் நோஸோமி ஒகுஹாராவை தோற்கடித்து இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.