சென்னை: சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பாமக தலைவராக தற்போதைய இளைஞரணி தலைவரம், டாக்டர் ராமதாஸ் மகனுமான அன்புமணி ராமதாஸ் தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கு சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார்.
ஒவ்வொரு தேர்தலின்போது, திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்யும் பாமகவுக்கு வட மாவட்டங்களில் பாமகவுக்கு கனிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனால், பாமகவின் பஞ்சோந்தி தனம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. அன்புமணியை கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின்போது, `மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற முழக்கத்துடன், களத்தில் இறங்கிய பாமகவுக்கு தேர்தலில் சம்மட்டி அடிதான் கிடைத்தது.
இதுகுறித்து பாமக தலைவர் ராமதாசும், கட்சி தொடங்கி 33 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே என்று புலம்பினார். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சிகளில் பாமக தீவிரம் கவனம் செலுத்தியது. கடந்த ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிட்டு கட்சி தொண்டர்களை ஊக்குவித்தது. அதை அடித்தளமாக கொண்டு, கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணியை கட்சித் தலைவராக கொண்டுவரத் திட்டமிடப்படப்பட்ட வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து சில தலைவர்களும் பேசி வந்தனர்.
இந்த நிலையில், நாளை (28-ம் தேதி) சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், அன்புமணி பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான், நாளை நடைபெற உள்ள பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பா.ம.க. வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை போன்று தீவிரமாக பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘பா.ம.க. சிறந்த செயல் வீரர்கள் விருது’ கடந்த 2020-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பாராட்டு பத்திரம், ஒரு பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2021-ம் ஆண்டுக்கான பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுக்கு 5பேரை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்ந்தெடுத்து உள்ளார்.
பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சி, பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராம.முத்துக்குமார், பசுமை தாயகம் பொதுச்செயலாளர் அருள் ரத்தினம், கடலூர் முன்னாள் மாவட்ட தலைவர் தட்டானோடை செல்வராஜ் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் சமூக முன்னேற்ற சங்க தலைவர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மீ.கா.செல்வகுமார், மாநில துணைத்தலைவர் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், பா.ம.க. மகளிர் அணி மாநில தலைவர் நிர்மல் ராசா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.
சென்னை திருவேற்காட்டில் நாளை (28-ந்தேதி) பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கும் சிறந்த செயல் வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார். 2022-ம் ஆண்டில் பா.ம.க. செயல்வீரர் விருதுகளை பெற அனைத்து நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்போது பாமக கட்சித் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகளாவதையொட்டி, அவருக்கு வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.