13 நாள் சிபிஐ காவலை இரு வார்த்தையில் விமர்சித்த ப சிதம்பரம்

Must read

டில்லி

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது 13 நாள் சிபிஐ காவலைக் குறித்து விமர்சித்த இரு வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெற முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் விதிகளை மீறி சலுகை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்து. அதையொட்டி  அவரை சிபிஐ விசாரணைக்கு அழைத்ததை அவர் ஏற்கவில்லை. ப சிதம்பரம் அளித்த முன் ஜாமீன் மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் அவரை சிபிஐ கைது செய்து விசாரித்து வந்தது

ப சிதம்பரத்திடம் சிபிஐ 13 நாட்கள் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் மேலும் இரு நாட்களுக்கு அவருடைய சிபிஐ காவலை நீட்டித்தது. அவரை டில்லி  நீதிமன்றத்தில் சந்தித்த செய்தியாளர்கள் சூழ்ந்துக் கொண்டு சிபிஐ காவல் எவ்வாறு இருந்தது எனக் கேள்விகள் எழுப்பினார்கள்.

அதற்குச் சிதம்பரம், “5 சதவிகிதம்” எனக் கூறி தனது ஐந்து விரல்களைக் காட்டியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

மேலும் பின் தொடர்ந்த செய்தியாளர்களில் ஒருவர், “5 சதவிகிதம் என்றால் என்ன?” எனக் கேட்டார்.

சிதம்பரம், “என்ன 5 சதவிகிதமா? உங்களுக்கு ஐந்து சதவிகிதம்  நினைவில்லையா?” என பதில் கேள்வி எழுப்பினார். அதையொட்டி ஒரு செய்தியாளர், “உள்நாட்டு உற்பத்தி விகிதமா? எனக் கேட்டதற்கு அவரைப் புன்முறுவலுடன் பார்த்தபடி சிதம்பரம் சென்று விட்டார்.

கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5% ஆக மிகவும் குறைந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியது புரிந்த செய்தியாளர்களும் புன்முறுவல் பூத்தனர்.

More articles

Latest article