இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள டாக்டர் சர்ஜிடோ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

உலகின் நான்காவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த சனிக்கிழமையன்று அதிகபட்சமாக 27,913 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் இங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் ஜாவா தீவில் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பு மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

உயிரிழப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் நோயாளிகள் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றும், தங்களிடம் ஆக்சிஜன் இருப்பு குறைந்து வருவதையும் தேவை அதிகரித்திருப்பது குறித்தும் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதார அமைச்சர் அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.