சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் பதில் தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 12 வயதுக்குட்பட்ட 810 சிறுவர்களுக்குத்ம கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக தமிழக தலைநகர் சென்னையில் ஏற்கெனவே 6,291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 6,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தமிழகம் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,31,498ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மேலும் 195 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 114 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 45 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு போதிய ஆக்சிஜனை ஒதுக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை அதற்கான எந்தவொரு நடைமுறையும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்துக்கு தினமும் 475 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக தெரிவித்தனர். தற்போது ஒரு நாளைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகதாகவும், இக்கட்டான சூழல் நிலவுவதாகவும் சுகாதாரத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை கேரள மாநிலம் பாலக்காட்டில் உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் வந்த நிலையில், தற்போது அந்த விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் தெரியவரும் என்று கூறியதுடன்,தமிழகத்திற்கு ஆக்சிஜன் வழங்குவது குறித்து உறுதியான முடிவு ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கு தொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு இன்றைக்குள் உறுதி செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[youtube-feed feed=1]