லண்டன்: கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகள் தயாரித்து வரும் நிலையில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் இந்தியா உள்பட உலக நாகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தியாவில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்த்து வருகிறது. தற்போது 3வது கட்டமாக இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசிகள் டிசம்பர் இறுதி அல்லது 2021 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கடந்த 8 மாதங்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களாக உலகம் முழுவதும் நடத்தப்பட்டது. பிரிட்டன் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் 3 கட்டங்களாக தடுப்பூசி செலுத்தி நடத்தப்பட்ட இறுதிக்கட்ட சோதனை முடிவுகள் லான்செட் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது. அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கும் விண்ணப்பித்துள்ளது. இதைத்தான் இந்தியஅரசும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு,
தடுப்பூசியானது ஒட்டுமொத்தமாக 70% அளவிலேயே பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடப்பட்டவர்களை 2 குழுக்களாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு குழுவினருக்கு வழக்கமான மருந்தும் அதனைத் தொடர்ந்து பூஸ்டர் மருந்தும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மற்றொரு குழுவுக்கு முதலில் குறைந்த அளவு (டோஸ்) தடுப்பூசி கொடுத்தும், பின்னர் வழக்கமான தடுப்பூசியும் போடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில், குறைந்த அளவு தடுப்பூசி பெற்ற 2-வது குழுவினர்களுக்கு 90 சதவிகித செயல்திறன் கிடைத்துள்ளது.
அதே சமயம் முதலில் வழக்கமான மருந்து வழங்கப்பட்ட குழுவினரிடம் 62.1 சதவிகித அளவிலேயே செயல்திறன் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2 டோஸ் மருந்து அளிக்கப்பட்டவர்கள், 70% பேர் கொரோனா அறிகுறிகளில் இருந்து தப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.