பீகார் தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் களம் கண்டு, வாக்குகளைப் பிரித்து, அதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர உதவினார் ஐதராபாத்தின் அசாதுதீன் ஓவைஸி. அவரின் கட்சி அம்மாநிலத்தில் 5 இடங்களையும் வென்றது.

அந்தக் கட்சி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் மாநகராட்சி தேர்தலிலும் களம் கண்டு, அகமதாபாத் மாநகராட்சியில் 7 வார்டுகளைப் பிடித்துள்ளது. மொத்தம் அது 22 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புறத்தில், தீவிர பாஜக எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஓவைஸி, உள்ளுக்குள் அவர்களுக்கான ஏஜென்டாக செயல்படுகிறார் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அந்தக் கருத்தை உண்மையாக்கும் வகையிலேயே நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

எதிர்வரும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் தனது கட்சி போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அங்கும் அவர் கணிசமான வாக்குகளைப் பிரித்தால், பாஜக அங்கே எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இந்த விஷயத்தில் முஸ்லீம் வாக்காளர்கள்தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஓவைஸி போன்ற வாக்குப் பிரிப்பு ஏஜெண்டுகளை முற்றிலும் நிராகரித்து, தங்கள் நலனை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!