பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ஓவியா, போட்டியில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. “இது ஒரு செட் அப் நிகழ்ச்சி, மக்களை முட்டாளாக்குகிறாகள், ஆபாசமாக உடை அணிகிறார்கள், அவதூறாகப் பேசுகிறார்கள்” என்று பல்வேறு புகார்கள், நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே இருந்தன. ஆனாலும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது பிக்பாஸ்.
இதில் கலந்தகொண்டிருப்பவர்களில் ஓவியாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதும் தெரியவந்தது.
போட்டியாளர்களில் பொய் சொல்லாதவர், பிறருக்கு தீங்கு நினைக்காதவர் என்கிற இமேஜ் ஓவியாவுக்கு ஏற்பட்டதே இந்த ஆதரவுக்குக் காரணம்.
ஓவியா தன்னிடம் அன்புக்காட்டிய சக போட்டியாளரான ஆரவிடம் காதலைத் தெரிவித்தார். ஆனால் தான் ஓவியாவை காதலிக்கவில்லை என்றும், அவர் மீது இருப்பது வெறும் சாஃப்ட் கார்னர் தான் என்று ஆரவ் தெரிவித்தார்.
இதனால் காதல் தோல்வியில் தனக்குத்தானே பேசிக்கொண்டு திரிந்தார் ஓவியா. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பிறரை சீண்டி வந்தார். இதெல்லாம் செட் அப் என்று கூறப்பட்டாலும் ஓவியா மீது ரசிகர்களுக்கு கூடுதல் “பாசம்” ஏற்பட்டது.
இந்த நிலையில் ஓவியா பிறரை டார்ச் சர் செய்வது அதிகரித்து. அவருக்கு மனநிலை சரியில்லை என்று சக போட்டியாளர்கள் பேசினர். மேலும் ஓவியாவை திரும்ப அழைத்து, அவருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஓவியா மனநிலை தவறியவர் போலவே பேசினார். அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க மருத்துவர் நாற்பத்தியைந்து நிமிடங்களில் வருவார் என்று கூறப்பட்டதோடு நிகழ்ச்சி முடிந்தது.
ஆனால் நேற்றே ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் வீடு போன்று பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நடக்கிறது. அங்கிருந்து தனது காரில் வெளியேறினார் ஓவியா.