பெங்களூரு

ர்நாடகாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.   இங்கு சுமார் 26.04 லட்சம் பேர் பாதிக்கபட்ட்டு 29 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 3.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.   இதில் பெங்களூரு நகரில் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.  தவிர கர்நாடகாவின் அனைத்து மாநிலங்களிலும் இவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர்.   தற்போது இந்தியக் குடிமகன்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண், “தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் வெளிநாடு செல்வோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  எனவே வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இங்குப் பணி புரிவோருக்கும் ஜூன் 1 முதல் கோவிஷீல்ட் தடுப்பூசி போட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 3 மணிக்குப் பெங்களூரு நகரப் பல்கலைக்கழக வளாகத்தில் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.   இங்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வோர் அவசியம் ஆதார், அல்லது பாஸ்போர்ட், மாணவர்களின் கல்வி நிலைய அடையாள சான்றிதழ் மற்றும் ஊழியர்களின் அலுவலக சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் டோசுக்கான இடைவெளி 12 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த இடைவெளி 1 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இவர்கள் வெளிநாடு செல்ல வேண்டி நேர்ந்தால் அதற்கு உதவியாக இருக்க இவ்வாறு இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.