டெல்லி: கடந்த 6ம் தேதி முதல் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது பற்றி பிரதமர் மோடி நாளை அறிவிக்க உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 6ம் தேதி முதல் கொரோனா பரவலானது படிப்படியாக குறைந்து வருவதை காண முடிவதாக விஞ்ஞானிகள் கூறி இருக்கின்றனர்.

ஊரடங்கு எதிரொலியாக, மக்கள் வீடுகளில் முடங்கி இருந்ததன் அறிகுறிகளே இது என்றும் அவர் கூறி உள்ளனர். இதே நிலை நீடித்தால் கணிசமாக கொரோனா தொற்றுகள் இன்னும் குறையக்கூடும் என்று  சென்னையின் கணித அறிவியல் நிறுவனத்தில் சவுமியா ஈஸ்வரன் மற்றும் சீதாப்ரா சின்ஹா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் 20,000 க்கும் குறைவான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கு அறிவிக்கப்படாமல் இருந்தால் அந்த எண்ணிக்கை 35000 ஆக இருக்கலாம்.

ஏப்ரல் 11 அன்று இந்தியாவில் 8,400 கொரோனா பாதிப்புகள் இருந்தன. ஆனால் அது ஏப்ரல் 5ம் தேதி இரு மடங்கானது. மார்ச் 4 முதல் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை விட, ஏப்ரல் 6 முதல் 11 வரை இருந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்து உள்ளனர்.