சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான விசாரணை மே 15ந்தேதி அன்று விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, வழக்கின் மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ம் ஆண்டுஜூன் 14 ஆம் தேதி அன்று அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறி சில மாதங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், அமலாக்கத்துறையினர், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அவர் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ளது. அடுத்த மாதம் 14ந்தேதி வந்தால், செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை ஓராண்டை கடந்து விடும்.
இதற்கிடையில், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் பல கட்ட சோதனைகளும் நடத்தப்பட்டன. பின்னர் விசாரணை மூலம் கிடைத்த தகவல்களைக்கொண்டு, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, தனக்கு ஜாமீன் கோரி வழங்க வேண்டும் செந்தில் பாலாஜி, தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தடுத்த பல மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை சார்பில் கடந்த 29ஆம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.