டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு  தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இது வரை 147 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 61.5 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 44.5% அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஒமிக்ரான் தொற்று பரவலில் இருந்து தடுக்க 15 வயது முதல் 15வயதுடைய இளஞ்சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மத்தியஅரசு அனுமதி வழங்கியது. அதன்படி, ஜனவரி 3ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கி 3 நாளில், அதாவது 5ந்தேதி மாலை நிலவரப்படி, ஒரு கோடி டோஸ்கள் என்ற மைல் கல்லை  கடந்துள்ளது என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இளம் இந்தியர்களிடம் அபார உற்சாகம் உள்ளது. 15 முதல் 18 வயதுள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். அதுவும் குழந்தைகளுக்கான தடுப்பூசி இயக்கத்தின் 3-வது நாளில். தகுதியுள்ள அனைத்து இளம் நண்பர்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.