கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவ தும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாலிவுட் படம் முதல் கோலிவுட் படம் வரை ஒடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது. தெலுங்கு படங்களுக்கும் இதுதான் நிலைமை. ஆனால் அந்த படங்கள் ரசிகர்களிடம் ஒடிடி தளத்திலும் வரவேற்பை ஈட்டுகின்றன. ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தெலுங்கு படம் ‘ஜோஹார்’. இதில் அங்கித் கோய்யா, நைனா கங்கூலி, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டோலிவுட்டில் கீதா ஆர்ட்ஸ் என்ற பட நிறுவன அதிபர் அல்லு அரவிந்த் ‘ஆஹா’ என்ற பெயரிட்டுள்ள ஒடிடி தளததை தொடங்கி உள்ளார். இதில் தெலுங்கு மொழிப் படங்கள் மட்டும் வெளியிடப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று ‘ஜோஹார்’ படம் வெளியாகி வரவேற்பை அள்ளியது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை அள்ளியது. இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். தெலுங்கில் இப்படத்தை இயக்கிய தேஜா மார்னி, தமிழிலும் இயக்குகிறார்.
இதில் நடிக்கும் நடிகர் நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அதற்கான விவரம் கொரோனா தடைக்காலம் முடிந்தவுடன் அறிவிக்க உள்ளனர்.
தியேட்டர்களில் பிரமாண்ட வெற்றி பெற்ற படங்கள் வேறுமொழியில் ரீமேக் ஆவது அடிக்கடி நடக்கிறது. தற்போது ஒடிடியில் வெளியாகும் படம் வேறு மொழியில் ரீமேக் ஆகிறது என்ற தகவல் திரையரங்கு அதிபர்களுக்கு மேலும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. அப்படியென்றால் தியேட்டர்கள் எல்லாம் அவ்வளவுதானா என்று ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.