மதுரை : யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது, ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு உள்ளது.
ஏற்கனவே திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களின் மொபைல் போன் பதியப்பட்டு, அவர்களின் ஓடிபி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓடிபி கேட்க உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

இந்தநிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரி தங்கமாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது, மனுவில், “ஓலா, உபர், ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியுரிமை பிரிவு, இ – சேவை, நில ஆவண பிரிவு உள்ளிட்ட அரசு சேவைகள் அனைத்திற்கும் பயனாளிகளின் மொபைல் எண்ணில் இருந்து ஓடிபி பெறப்படுகிறது. இதன் மூலமாக தனிப்பட்டவர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. எனவே மொபைல் எண் ஓடிபி பெறுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு,”ஓடிபி எண் மூலமாக மக்களின் தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகிறது என பொத்தாம் பொதுவாக கூற முடியாது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஓடிபி பெறாமல் எந்த ஆன்லைன் சேவையும் நடைபெறாது. அனைத்து வகையான ஓடிபிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
தரவுகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு ஓடிபி பெறுகின்றன. யுபிஐ பணப்பரிவர்த்தனை, ரயில் டிக்கெட், உணவு ஆர்டர், வாடகை கார் போன்றவற்றுக்கு ஓடிபி பெற தடை விதிக்க முடியாது.
மனுதாரர் விளம்பர நோக்கில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தால் அதுபற்றி விசாரிக்கலாம்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.