ஸ்ரீநகர்: காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வீரரும் ஆலோசகருமான இர்ஃபான் பதான், பயிற்சியாளர்கள் மிலாப் மெவாடா மற்றும் சுதர்ஷன் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் உடனடியாக அம்மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காஷ்மீரைச் சாராத அணி தேர்வாளர்களும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் வெளியேறுவதால், அம்மாநில கிரிக்கெட் அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஆகஸ்ட் 17ம் தேதி துலீப் கோப்பை போட்டிகள் துவங்கவுள்ளன. அதனையடுத்து விஜய் ஹசாரே கோப்பை போட்டியும் துவங்கவுள்ளது. ரஞ்சிக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டிகள் டிசம்பர் 9ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளன.

காஷ்மீரில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலால், அம்மாநிலத்தில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகளை ரத்துசெய்யுமாறு அம்மாநில கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அம்மாநிலத்தில் முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பிறமாநில கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

சரியான சூழல் வரும்வரை அம்மாநிலத்தில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும், காலம் கனிந்த பிறகே அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.