மூன்று பெண்களை சுற்றிவரும் கதை.
ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் பணக்கார நிவேதா. இவருக்கும் ஏழ்மையில் தவிக்கும் தினேஷுக்கும் காதல். திருமணம் என்று நிவேதா பேச்செடுக்கம் போதெல்லாம் குடும்ப சூழலைச் சொல்லி தள்ளிப் போடுகிறார் தினேஷ். இதனால் நிவேதாவுக்கு தினேஷ் மீது எரிச்சல்.
தன் அப்பாவைச் சந்தித்து பெண் கேட்கச் சொல்கிறார். ஆனால் அப்பாவோ தினேஷின் ஏழ்மையை குத்திக்காட்ட… தினேஷ் வருத்தத்தோடு வெளியேறிவிடுகிறார் .
எஃப்எம். ரேடியோவில் பணியாற்றும் ரித்விகா. மேட்ரிமோனியில் வரன் தேடும் இவருக்கு ஒரு மாப்பிள்ளை செட் ஆக, நிச்சயதார்த்தமும் முடிகிறது. இந்த நிலையில் இன்னும் அழகான பெண் வேண்டும் என்ற ஆசையில் (மீடியாவில் வேலைப் பார்க்கும் பெண் என்பதால் சந்தேகமும்,உண்டு!) ரித்விகாவை உதற பார்க்கிறார் மணமகன். அவரிடம் கெஞ்சுகிறார் ரித்விகா. அவரே தனது முடிவை மாற்றிக்கொள்வதாய் இல்லை.
மிக அமைதியான பெண் மியா ஜார்ஜ். நிறைய நல்ல மாப்பிள்ளைகள் வருகிறார்கள். எல்லாரிடமும் ‘உங்களத்தான் மனசுல வச்சிருக்கேன்.. சொல்லி அனுப்புகிறேன்’ என்று தட்டிக் கழிக்கிறார் மியா.
காலம் ஓடிக்கொண்டே இருக்க… இரண்டாம் தாரமாக வரன்கள் வரும் நிலை. அப்போது ஸ்மார்ட்டான மணமகன் வருகிறார்.
இந்த மூன்று பெண்களின் நிலை என்ன ஆனது என்பதுதான் படம்.
வழக்கமான கதைதான் என்றாலும் சொன்ன விதத்தில் வித்தியாசப்படுத்தி சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் இயக்குநர்.
அதிலும் மூன்று நான்கு கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்து அதை ஒரு இழையில் கோர்ப்பது என்பது தனி வித்தை. அதை செவ்வனே செய்திருக்கிறார்.
அதே நேரம் சில காட்சிகளில் சொதப்பவும் செய்திருக்கிறார். மகா சாதுவான மியாவை ஊருக்கே போய்தானே அந்த மாப்பிள்ளை அழைத்து வந்திருக்க வேண்டும்… அதே போல , ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் தன்னுடன் அவுட்டிங் வரும் காதலியிடம் மனக் குமுறல்களைக் கொட்டுகிறாரே தினேஷ், அதை முன்பே சொல்லியிருக்கலாமே…!
மற்றபடி படத்தில் ப்ளஸ்கள்தான் அதிகம். குறிப்பாக நாயகன், நாயகி என்று வலம் வராமல் எல்லா கதாபாத்திரத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பாராட்டலாம்.
இயல்பான திரைக்கதை. அதற்கு ஏற்ற எடிட்டிங். உறுத்தாத ஒளிப்பதிவு என்று பாராட்ட வேண்டிய அம்சங்கள் நிறைய.
நாயகிகளில் மூவருமே இயல்பாக தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரித்விகாவின் அந்தக் கண்களும், முக பாவமும் ரொம்பவே ஈர்க்கின்றன.
மொத்தத்தில் “ஒரு நாள் கூத்து” ரசிக்கவைக்கிறது!