ரூர்கேலா

சிக்க இடம் இல்லாமல் ஒரிசாவை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் கழிப்பறையில் வசித்து வருகிறார்.

ஒரிசா மாநிலத்தில் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஜலடா.   அந்தக் கிராமத்தை சேர்ந்த சோட்டு ரவுஷியா என்பவரது இருப்பிடத்தை ரூர்கேலா இரும்புத் தொழிற்சாலை அமைக்க அரசு கைப்பற்றியது.   இந்த நிலம் கைப்பற்றிய வருடமான 1955ஆம் வருடத்தில் சிறு குழந்தையாக சோட்டு ரவுஷியா தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.  பிறகு அரசு இவர்களுக்கு வேறொரு இடத்தை வசிக்க அளித்தது.  இடமும் போதுமானதாக இல்லாமல்,  ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை மட்டுமே இருந்த அந்த வீட்டில் ரவுஷியாவின் பெற்றோர்கள் மரணம் அடைந்தனர்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடற்றோருக்கு வழங்கப்படும் திட்டத்தின் கீழ் தனக்கும் ஒரு வீடு வேண்டும் என மனு அளித்தார்.   அவருக்கு வீடு வழங்கப்படவில்லை.  அதே நேரத்தில் அவர் வசிக்கும் இடத்தில் அவருக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு கழிப்பறை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.   வீடு இல்லாமல் கழிப்பறையை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனப் புரியாமல் கழிப்பறையில் ரவுஷியா வசிக்க ஆரம்பித்துள்ளார்.   தற்போது கழிப்பறையை வீடாக்கிய கொடுமையினால் தனது இயற்கைக் கடன்களை வெட்ட வெளியில் கழித்து வருகிறார்.