“கபாலி” உண்மைக்கதை என்று இயக்குநர் பா.ரஞ்சித் சொல்ல.. திரையில் உலவிய அந்த கதாபாத்திரங்களின் நிஜ முகம் எது என்ற தேடல் நடக்க ஆரம்பித்துவிட்டது.
மலேசியாவின் பெந்தாங் பகுதியில் வசித்த காளி என்ற நபரின் வாழ்க்கையைத்தான் கொஞ்சம் மாற்றி, “கபாலி”யாக உருவாக்கியிருக்கிறார் ரஞ்சித் என்கிறார்கள்.
இந்த காளி பற்றி தேசிகன் என்பவர் தனது வலைப்பூவில் எழுதிய கட்டுரை இது. இதை கபாலி வந்த பிறகு அல்ல..  2010ல் எழுதியிருக்கிறார்.

"கபாலி" படத்தில் ரஜினி
“கபாலி” படத்தில் ரஜினி

இதோ.. “பெந்தோங்” காளி பற்றி தெரிந்துகொள்வோம்..
1990களில் உலுக்கிய  90ஆம் ஆண்டு ஆரம்ப காலங்களில் மலேசியாவை உலுக்கியப் பெயர் ஒன்று உண்டென்றால் அது பெந்தோங் காளியாகத்தான் இருக்க முடியும். மலேசிய இந்தியர்களின் மீது படிந்துள்ள வன்முறை முத்திரை  அழுத்தந்திருத்தமாக மலேசிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது “பெந்தோங்” காளியின் கொலை வெறி ஆட்டத்திற்குப் பிறகுதான்.
22ஆம் தேதி ஜனவரி மாதம் 1961ஆம் ஆண்டு பெந்தோங், பகாங் மாநிலத்தில் பிறந்தவன்தான் பி.காளிமுத்து என்ற பெந்தோங் காளி. மொத்தம் பதினொரு பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பத்தி;ல் இவன் எட்டாவது பிள்ளை. பெந்தோங் நகரத்தில் பிறந்ததால் காளி என்ற பெயரோடு நகரத்தின் பெயரும் இணைந்துக் கொண்டது.
தனது 14ஆம் வயதில் முதலாம் படிவக் கல்வியை பாதியில் நிறுத்திய காளி, சீனர்களால் வழிநடத்தப்பட்ட “04′ என்ற குண்டர் கும்பலில் சேர்ந்தான். பிற்காலத்தில் அவனொரு பெரிய குற்றவாளியாக இங்கே அவன் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் உதவின. 1980ஆம் ஆண்டு  செய்த ஒரு குற்றம் காரணமாக கைது செய்யப்பட்ட பெந்தோங் காளி சிறையில் அடைக்கப்பட்டான். இந்தச் சம்பவம் அவன் தன்னையே மிகப் பெரிய ஆளாகவும், போலீசாரால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அனைவரும் மற்ற மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள் என்று நம்பக் காரணமாக அமைந்தது. இயற்கையாக காளிக்கு இருந்த மனோதிடம் அவனை வேறு பாதைக்கு இழுத்துச் சென்றது.
சிறையிலிருந்து வெளியே வந்த காளி, 1984ஆம் ஆண்டு “08” என்ற இந்தியர் குண்டர் கும்பலில் தன்னை இணைத்துக் கொண்டான். இதற்குப் பின்னர்தான் கோலாலம்பூரின் முக்கிய பகுதிகளான பிரிக்ஃபீல்ட், சிகாம்புட், சுங்கைவே, அம்பாங் போன்ற பகுதிகளில் கொலை, கொள்ளை,  மற்றும் போதைப் பொருள் விநியோகம் போன்ற சட்டவிரோத செயல்களை செய்யத் தொடங்கினான். காளியின் இந்த அதிரடி வளர்ச்சி போலீசாரின் பார்வையை அவன் பக்கம் திருப்பியது.
 
1353946_Wallpaper1
1985ஆம் ஆண்டு ஊரடங்கு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்ட காளி, பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஜெரஜாக் தீவு சிறையில் கடும் கண்காணிப்பின் கீழ் அடைக்கப்பட்டான். இருந்தாலும் 1987ஆம் ஆண்டு அவரது சொந்த மாநிலமான பகாங்கை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையோடு அத்தீவு சிறையிலிருந்து அவன்  விடுவிக்கப்பட்டான்.
வெளியே வந்ததும், முதல் காரியமாக போலீஸ் விதித்த நிபந்தனைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட காளி, மீண்டும் கோலாலம்பூர் ஜாலான் கிள்ளான் லாமாவில் “04” என்ற புதிய குண்டர் கும்பலை உருவாக்கினான். தனியொரு மனிதனாக செயல்பட்ட காளிக்கு இதன் மூலம் ஆள் பலம் பெருகியது. ஆரம்பத்தில் தலைநகரின் முக்கிய இடங்களில் மட்டும் போதைப் பொருளை விநியோகித்து வந்த காளி இந்த முறை கோலாலம்பூரின் அனைத்து பகுதிகளுக்கும் தனது போதைப் பொருள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினான். இது அவனது பணபலத்தை பெருக்கியது. தன்னை நிழல் உலகின் ராஜாவாக நிலைநிறுத்திக் கொள்ள காளிக்கு இவை இரண்டும் மிகவும் உதவின.
1990ஆம் ஆண்டு, கடும் போதைப் பொருள் சட்டப்பிரிவின் கீழ் காளி போலீசாரால் கைது செய்யப்பட்டான். இருந்தாலும் அவன் மீதான குற்றச்சாட்டை முழு ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதைத் தொடர்ந்து அவனுக்கு விடுதலை கிடைத்தது. இந்த விடுதலைதான் காளிக்கு மிகப்பெரிய தைரியத்தைக் கொடுத்தது. அந்தச் சூட்டோடு அவன் செய்ததெல்லாம் ரத்தத்தை உறைய வைக்கும் கொலைகள்.
14 ஜுன் 1993ஆம் ஆண்டு பலாக்கோங் தாமான் தாமிங் ஜெயாவில் ஒரு பிறந்தநாள் விழா.  அவ்வட்டார மக்கள் சுமார் 40 பேர் அவ்விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டிருந்தனர். திடீரென தனது நண்பனோடு அங்கு வந்த காளி, அந்த விழாவில் கலந்து கொண்ட 4 பேரை சுட்டுக் கொன்றதோடு மேலும் இருவரை கடுமையான காயத்திற்கு உள்ளாக்கிச் சென்றான். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மலேசியாவையே காளியைக் கண்டு அலறச் செய்தது.
மலேசியாவையே அலறச் செய்தது என்ற இந்த வாசகம் ஏதோ மிகைப்படுத்தி சொன்னதாக தெரியலாம். ஆனால் 1991-1993 ஆம் ஆண்டுகளில் தலைநகர் மக்களில் பலர் இரவு 8.00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே நடமாடுவதையும்  குடும்ப, சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதையும் குறைத்துக் கொண்டனர். அரசியல் தலைவர்கள் பலரும் இரவு 9.00 மணிக்கு மேல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்தனர். இவை எல்லாவற்றையும் விட, பொது மக்களில் பலர் தலைநகரை விட்டு கொஞ்சம் வெளியே தள்ளிச் சென்று வசிக்கவும் தலைப்பட்டனர். இது மலேசிய அரசுக்கும் காவல் துறைக்கும் மிகுந்த தர்மசங்கடத்தை உண்டாக்கியது.
காளியைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு மலேசிய ரிங்கிட் ஒரு லட்சம் கொடுப்பதாக அறிவித்த காவல் துறை அவனை சல்லடை போட்டு தேடத் தொடங்கியது. “ஓப்ஸ் புஞ்சிட்” என்று பெயரிடப்பட்ட அந்த வேட்டையில் சிலாங்கூர், பகாங் மற்றும் தலைநகரைச் சேர்ந்த போலீஸ் படையினர் ஈடுபட்டனர். பெந்தோங் காளி இதற்கெல்லாம் அசரவில்லை.
காவல் நிலையம் ஒன்றை தொலைபேசி வழி தொடர்பு கொண்ட காளி, முடிந்தால் தன்னோடு  மோதிப் பார்க்கும்படி காவல் துறையினருக்கு நேரடி சவால் விடுத்தான். தன்னை பிடிக்க நாட்டையே அலசிக் கொண்டிருப்பவர்களை அழைத்துப் பேச ஒருவனுக்கு எவ்வளவு திமிரும் துணிச்சலும் இருக்க வேண்டும். அதுதான் காளி! இந்த பயமறியா தன்மைதான் காளியின் பலம்.
தனது வீட்டிற்கு அருகில் சிறுநீர் கழித்த காரணத்திற்கான பெந்தோங் காளியை யாரென்றே தெரியாத ஒரு ரொட்டை சானாய் வியாபாரி ஏசிவிட, அங்கேயே அவரை சுட்டுக் கொன்றது, ஜாலான் கிள்ளான் லாமாவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த ஒரு வாலிபனை சுட்டுக் கொன்றது என தொடராக மொத்தம் 16 கொலைகள். கோபம் வந்தால் போதும், எங்கேயும் யாரையும் சுட்டுவிடுகின்ற காளியின் கொலை வெறி தாண்டவம் ஒரு பக்கம் எல்லை மீறி போய்க் கொண்டிருந்தது.
இதனால் அப்பாவி பொதுமக்கள் பலரும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். அன்றைய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தியாகிப் போனான் காளி. ஒவ்வொரு நாளும் காளியைப் பற்றி வெளிவந்த செய்திகள் மக்களின் வாய்க்கு நல்ல அவலாகிப் போனது. காப்பிக் கடை தொடங்கி கோயில் வரை எங்கும் காளியைப் பற்றிய முணுமுணுப்புதான். இதனால் காளியைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்தன.
ஒரு சாரர் அவனை நல்லவன் என்றும் தன்னை வஞ்சித்தவர்களை பழிவாங்கவே அவன் கொலைகள் செய்கிறான் என்றனர். இன்னொரு சாரர் அவனை ஈவு ஈரக்கமில்லா கொலைகாரன் என்றனர். எது எப்படியோ சட்டத்தைப் பொருத்தவரை காளி ஒரு கொலைகாரன். பொதுமக்களுக்கும் இந்த நாட்டிற்கும் கேடு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்து விட்டுதான் மறுவேலை என்ற ரீதியில் போலீசாரும் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டு வந்தனர்.
எல்லா மனிதர்களுக்கும் ஒரு முடிவு இருப்பதைப் போல காளியின் ஆட்டத்திற்கும் ஒரு முடிவுரை எழுதப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஜுன் 29ஆம் தேதி, மேடான் டமான்சாரா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில், தனது காதலி மற்றும் நண்பனோடு காளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சிறப்புக் குழுவொன்று அந்த வீட்டை சுற்றி வளைத்தவுடன் காளியை சரணடையச் சொல்லி கேட்டுக் கொண்டனர். தப்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசார் மீது துப்பாகிச் சூடு நடத்திய காளியை அங்கேயே போலீசார் சுட்டுக் கொன்றனர். காளியோடு அவனது காதலியும் நண்பனும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
துப்பாக்கிச் சூட்டில் முகம் சிதைந்து இறந்த காளியை அடையாளம் காட்ட வந்த அவனது தாயார், அது தன் மகன் இல்லை என்று சொல்லி அதிரவைத்தார். அவரது இந்த வாக்குமூலம் பொது மக்களிடையே ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கிது.  “பெற்ற தாய்க்கு மகனைத் தெரியாதா?” “காளி பக்கத்து நாடான தாய்லாந்திற்கு தப்பி விட்டான்” என்று தொடங்கி பல யூகங்கள் குழப்பங்கள். பதில் சொல்ல வேண்டிய காவல் துறையோ மௌனம் சாதித்தது. இறுதியில் காளியின் உடல் மீது நிகழ்த்தப்பட்ட மருத்துவ பரிசோதனை இறந்தது காளிதான் என்று  உறுதிப்படுத்தின.
சின்ன சலசலப்புக்கு இடையேதான் காளியின் இறுதி காரியங்கள் நடைப்பெற்றன. காளியைக் காட்டிக் கொடுத்தவர்களை அழிப்போம் என்று அன்று மயானத்தில் காளியின் நண்பர்கள் சபதம் எடுத்துக் கொண்டதாகக் கூட செய்திகள் வந்தன. ஆனால் அங்கு நடந்த அனைத்தையும் கூர்ந்து கவனித்து வந்த காவல் துறை அப்படி ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டது.
நாட்டையே உலுக்கிய ஒருவனின் வாழ்வில் அவன் மீது இருக்கின்ற போலீஸ் குற்றப்பதிவு மற்றும் பொது மக்களின் வெறுப்பைத் தவிர சாம்பல் கூட இன்று எஞ்சி இருக்குமா தெரியவில்லை… ஆனாலும் காளியின் அடியொற்றி நம் இளைஞர்களில் ஒருசிலர் போய்க் கொண்டிருக்கும் திரும்பவே முடியாத வன்முறைப்  பாதை…. கவலையளிக்கிறது!
(ரத்த சரித்திரம் படம் பார்த்து முடித்ததும், பெந்தோங் காளியின் நினைவு வந்தது. அதற்காகவே இந்த பதிவை எழுதினேன். இணையத்திலிருந்து சில தகவல்களையும் நான் நேரடியாக படித்த, கேட்ட விஷயங்களை மட்டுமே இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன். மற்றபடி இது பெந்தோங் காளியைப் பற்றிய முழுமையான பதிவு அல்ல). 

  • தேசிகன் wordpress.com   2010 ம் ஆண்டு எழுதியது