வாரனாசி

வாரனாசி மாவட்ட ஆட்சியாளர் பனாரஸ் இந்து பல்கலைக்கழக காவலர்கள் சீருடையின் நிறத்தை மாற்றும் படி உத்தரவிட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.   சமீபத்தில் அங்கு ஒரு பெண்ணிடம் சிலர் பாலியல் சீண்டுதல் செய்ததால் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  அதன் பிறகு கலவரம், தடியடி ஆகியவை நடைபெற்று 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.  மாணவர்கள் மட்டுமின்றி பெண்களும், பத்திரிகையாளர்களும் தடியடியில் காயம் அடைந்துள்ளனர்.

இந்துப் பல்கலைக்கழகத்தின் காவலர்களுக்கு காக்கி கலரில் சீருடைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.  சீருடையின் நிறம் மட்டும் இன்றி தொப்பிகள், பெல்ட்டுகள் ஆகியவையும் போலீசாரின் சீருடை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.   இதனால் போலிசாருக்கும் பல்கலைக்கழக காவலர்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதற்காக காவல் அதிகாரி பரத்வாஜ் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியாளரை கேட்டுக் கொண்டார்.

வாரணாசி மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக பல்கலைக்கழக காவலர்களின் சீருடையை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  இதை உடனடியாக அமுலுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கூறி உள்ளார்.  கடந்த 2016ஆம் வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அன்று இதே போல உத்தரவு ஒன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டும் நிர்வாகம் ஆவன செய்யவில்லை என கூறப்படுகிறது.