டில்லி

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 73 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்

விவசாயக் கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பு ஆகிய பல கோரிக்கைகளுக்காக அய்யாக்கண்ணு தலைமையில் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் 73 நாட்களாக போராடி வருகின்றனர்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராட்டம் நடத்தியும் அரசு இவர்கள் போராட்டத்தை கண்டுக் கொள்ளவில்லை.

நேற்று மோடி போல் வேடம் அணிந்த ஒருவர் விவசாயிகளை அடித்து உதைப்பது போல ஒரு காட்சியுடன் போராட்டம் நடந்தது.  அப்போது விவசாயி ஒருவரை போலீசார் தாக்கியதாகக் கூறி கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.  டில்லி போலிசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

டில்லி போலீசார் தமிழக விவசாயிகளை ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.  இது குறித்து அய்யாக்கண்ணு, “நாங்கள் அனுமதி இன்றி போராட்டம் நடத்துவதாக கூறி உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என டில்லி போலீஸ் துணைக் கமிஷனர் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.  இது போல இது வரை எங்களுக்கு மூன்று நோட்டிஸ்  அனுப்பி உள்ளனர்.   எங்களின் நியாயமான போராட்டத்தை தடுக்க தண்ணீர் சப்ளையையும் நிறுத்தினார்கள்.   எங்களின் போராட்டத்துக்கு பின் தண்ணீர் சப்ளை மீண்டும் வந்தது.  நாங்கள் ஒரு நிரந்தர தீர்வு காணாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.