சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து நேற்றுமுதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.