சென்னை: அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  ஒற்றை தலைமை தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக, இருவரும், அவர்களது இல்லங்களில்  தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஓபிஎஸ்-ஐ விட எடப்பாடிக்கு மாவட்டச்செயலாளர்கள் மத்தியில் அதிக ஆதரவாளர்கள் இருப்பதால், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து, சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தால், அது சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால், ஓபிஎஸ் தரப்பு மிரட்டுபோய் உள்ளது. இதனால், பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதை இபிஎஸ் தரப்பு ஏற்க மறுத்தால், நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக  ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன், பெரம்பலூர் மா.செயலாளர் ராமந்திரன், அரியலூர் மா.செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பொதுக்குழுவில் எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் இறுதி முடிவு எடுக்கும் உரிமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும் இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அவைத்தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக  அதிமுகவில் மோதல் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இருதரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.